ஆவின் பால் விலை அதிரடியாக எகிறியது- அதுவும் அதிர்ச்சி தரும் உயர்வு!

ஆவின் பால் விலையை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு வரும் திங்கள் (19-08-2019) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான ஆவின் பால் விலையும் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நுகர்வோருக்கு தரமான பால் விற்பனையை உறுதி செய்வதே அரசின் நோக்கம். இதையொட்டி விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, பசும் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4, எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பசும் பால் கொள்முதல் விலை ஒரு லிட்டர் ரூ.28ல் இருந்து, ரூ.32ஆக உயர்கிறது. 

மேலும் எருமைப் பால் கொள்முதல் விலை ஒரு லிட்டர் ரூ.35ல் இருந்து, ரூ.41ஆக உயர்கிறது. இந்த விலை அதிகரிப்பு நாளை(ஆகஸ்ட் 19) முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஏற்றத்தால் 4.6 லட்சத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விலை உயர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த 5 ஆண்டுகளாக பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தவில்லை. 

இதன் காரணமாக தற்போது அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளதைப் போன்று தோன்றுகிறது. ஆனால் விலைவாசி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை கருத்தில் கொண்டால், விலை உயர்வு பெரிதாக தெரியாது.

கொள்முதல் செய்யக்கூடிய அனைத்து பாலும் விற்பனை ஆவது இல்லை. எனவே குறிப்பிட்ட அளவு பால் பவுடராக மாற்றப்படுகிறது. இதனால் ஆவின் நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படக்கூடும். 

இதை தவிர்க்கவே, கொள்முதல் விலையை விட விற்பனை விலை ரூ.2 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகம் தற்போது லாபத்தில் தான் இயங்கி வருகிறது. இந்த நிலை மாற வேண்டாம் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார். 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *